லக்னோ:
அரசு துறைகளில் எஸ்சி மற்றும் பின்தங்கியோருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, பாஜகவின் சாதிய பார்வையே காரணம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சி தலைவர்களின் மத்தியில் பேசிய மாயாவதி, பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்பது, சிறிய அளவிலேயே பயன் தரும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. மத்தியிலும், உத்தரபிரதேச மாநிலத்திலும் இந்த நிலைதான்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டு பயனை அடைய தகுதியுடையவர்கள். இவர்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இது பாஜகவின் குறுகிய பார்வையையும்,சாதிய மனோநிலையையும் பிரதிபலிக்கிறது.
பின்தங்கிய வகுப்பினரான 17 சாதிகளை சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மக்களின் வெறுப்பையே சம்பாதிக்கும்.
இதே போன்ற நடவடிக்கையை அரசியல் லாபத்துக்காக சமாஜ்வாதி அரசு ஏற்கெனவே மேற்கொண்டது.
சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு அளவு 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.
அங்கு எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டு அளவையும், பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டையும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்றார்.