மும்பை
காவல்துறை கண்காணிப்பில் இருந்த வாகனத்தில் கைப்பற்றப் பட்ட பொருட்களுக்கு உரிமையாளர் பொறுப்பில்லை என மும்பைநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு அதிகாரியான சுபாங்கி பாலகிருஷ்ண அங்குஷ் என்னும் பெண் அதிகாரி கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அன்று ஒரு குற்றச்சாட்டை பதிந்தார். அதில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அன்று ஒரு அரசியல் கட்சி தொண்டர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் குட்கா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததாக தகவல் வந்ததாகவும், அதை ஒட்டி அந்த வாகனம் ஏப்ரல் 30 அன்று பறிமுதல் செய்யபட்டதாகவும் பதியப்பட்டிருந்தது.
இதை ஒட்டி அந்த வாகனத்தின் சொந்தக்காரர் முன் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் மீண்டும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “இந்த வழக்கு மிகவும் அதிசயமாகவும் அதிர்ச்சி ஊட்டுவதாகவும் உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு மார்ச் 23 முதல் கண்காணிப்பில் இருந்துள்ளது.
ஆனால் இதற்கான குற்றச்சாட்டு ஒரு மாதத்துக்குபிறது ஏப்ரல் 30 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாமதம் ஏற்படும் அளவுக்கு காவல்துறை ஏன் அலட்சியமாக இருந்தது என்பது புரியவில்லை. அத்துடன் இந்த வாகனத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கும் ஜாமீன் மனுதாரருக்கும் எவ்விதத்தில் தொடர்பு என விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்த வாகனத்தில் இருந்த பொருட்கள் இதே வாகனத்தில் இருந்து கைப்பற்றபட்ட போதிலும் காவல்துறையின் கண்காணிப்பில் ஒரு மாதம் இருந்த பிறகே கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கும் இந்த பொருட்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக கூற முடியாது. எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் அளிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்துள்ளது.