புதுடெல்லி:
பின்தங்கிய வகுப்பினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உத்தரப்பிரதேச அரசு சேர்த்தது சரியல்ல என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறியுள்ளார்.
ராஜ்யசபையில் கேள்வி நேரத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா பேசும்போது, கடந்த ஜுன் 24-ம் தேதி உத்தரப்பிரதேச அரசு மாவட்ட மாஜிஸ்திரேட்கள் மற்றும் ஆணையர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், கஷ்யாப், ராஜ்பர்,திவார், பிண்ட், கும்ஹார், கஹார், கேவத், நிஷாத், பார்,மல்லா, பிரஜாபதி, திமார், பதம், துரா, கோடியா, மஞ்சில் மற்றும் மச்சுவா ஆகிய பின்தங்கி வகுப்பினருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே போன்று சில பின்தங்கிய வகுப்பினரை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அப்போதை முதல்வர் முலாயம் சிங் யாதவ் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தற்போது அதே தவறை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்கிறார்.
நடைபெற இருக்கும் 12 சட்டப்பேரவை இடைத் தேர்தலை கருத்தில் கொண்டே யோகி ஆதித்யநாத் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றார்.
இதற்குப் பதில் அளித்த மத்திய சமூக நீதி மற்றம் அதிகாரத் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் அளித்த பதிலில், 17 பிற்படுத்தப்பட்ட சாதிகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உத்தரப்பிரதேச அரசு சேர்த்தது சரியல்ல.
இந்த 17 சாதிகளையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரப் பிரதேச அரசு சேர்க்க விரும்பினால், விதிமுறைகளைப் பின்பற்றி மத்திய அரசுக்கு உத்தேச பரிந்துரையை அனுப்பியிருக்க வேண்டும். அதனை மத்திய அரசு பரிசீலிக்கும்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்தின்படி சரியல்ல. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம் என்பதால், புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் தரவேண்டாம் என உத்தரப்பிரதேச அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஒரு சாதியை மற்றொரு சாதிக்கு மாற்றுவது நாடாளுமன்றத்தின் உரிமையாகும். இதுபோன்று 4 முறை மத்திய அரசுக்கு வந்த உத்தேச கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதில், சரியான நடைமுறையை உத்தரப் பிரதேச அரசு பின்பற்ற வேண்டும்.
இதனையடுத்து, இந்த விசயத்தில் சரியான நடைமுறையை பின்பற்றுமாறு உத்தரப்பிரதேச அரசை அறிவுறுத்துமாறு, மத்திய அமைச்சர் கெலாட்டை, ராஜ்யசபை தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.