ஜெய்ப்பூர்

முதல் வரிசையைல் பெண்கள் அமர்ந்திருந்ததால் தனது உரையை நிகழ்த்தாமல் தன்னம்பிக்கை உரையாளரான சுவாமி ஞானவாத்சல்யா வெளியேறி உள்ளார்.

சென்ற வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் ராஜ் மெடிகான் 2019 என்னும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ராஜஸ்தான் மருத்துவர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது. ஜெய்ப்பூரில் உள்ள பிர்லா அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் தினம்  ஒரு பிரபலம் உரையாற்றினர். அவ்வரிசையில் இறுதி தினத்தன்று சுவாமி ஞானவாத்சல்யாவின் உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுவாமி ஞானவாத்சல்யாவின் உரைகள் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும். அவருக்கு பல ஆதரவாளர்கள் உள்ளனர். அவரை பலரும் ஊக்குவிக்கும் உரையாளர் எனவே அழைப்பது வழக்கமாகும். அவ்வகையில் அவரது உரையை கேட்க அரங்கில் பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் அமர்ந்திருந்தனர்.

சுவாமி ஞான வாத்சல்யா அரங்கினுள் வந்து பெண்கள் முன் வரிசைகளில் அமர்ந்திருப்பதை கண்டு பின்பக்கம் சென்று விட்டார்.   அதன் பிறகு விழா அமைப்பாளர்கள் மூலமாக சுவாமி ஞானவாத்சல்யா கூட்டத்துக்கு வந்துள்ள் பெண் மருத்துவர்கள் யாரும் முதல் 7 வரிசைகளுக்குள் அமரக்கூடாது என தெரிவித்துள்ளார். இதற்கு பெண் மருத்துவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளனர். அதை ஒட்டி அவர்களை முதல் 3 வரிசைகளுக்குள் அமரக்கூடாது என விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவாமியின் உரையை கேட்க மிகவும் ஆவலுடன் இருந்த பெண்கள் முன் வரிசையில் அமர்ந்தனர். இதைக் கண்ட சுவாமி உரையை நிகழ்த்தாமல் அரங்கில் இருந்து வெளியேறி உள்ளார். இதற்கு பெண் மருத்துவரான ரிது மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். தம்மை போன்ற பல பெண்கள் சுவாமியின் உரையைக் கேட்க வந்த போது அதை மதிக்காமல் அவர் வெளியேறியது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.