மும்பை:

பெற்ற தந்தையை சரியாக கவனிக்காமல் துன்புறுத்திய மகனிடம் இருந்து, தந்தை வழங்கிய சொத்தை திரும்ப பெற மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கி உள்ளது.  நீதிமன்றத்தின்  இந்த  உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வயதான காலத்தில் பெற்றோர்களை  மோசமாக நடத்தினால் அல்லது துன்புறுத்தினால் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு பரிசளித்த எந்தவொரு சொத்தையும் திரும்பப் பெறலாம் திரும்பப் பெறலாம் என்று பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வயதான தம்பதி, தங்களின் பிளாட்டை மகனுக்கு தானப்பத்திரமாக எழுதி வைத்துவிட்ட நிலையில், அவர்களை  மகனும் மருமகளும் சரியான முறையில் கவனிக்காமல் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து, மகன் மற்றும் மருமகள் மீது வயதான பெற்றோர் தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்த னர். வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி, மகனுக்கு அவரது பெற்றோர் தானமாக வழங்கிய சொத்தை திரும்ப பெற உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, வயதான பெற்றோரின் மகன் மும்பை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெற்றோரை சரியாக கவனிக்காத மகனுக்கு தந்தை அளித்த பரிசு சொத்து பத்திரத்தை ரத்து செய்ததுடன், தீர்ப்பாயத்தின் நீதிபதியின் உத்தரவு சரியே என்றும் தெரிவித்தனர்.

மகனின் வேண்டுகோளை ஏற்றுதான், அவரது பெற்றோர் சொத்தை மகனுக்கு தானமாக எழுதிய தாகவும், மகன் மற்றும் மருமகள் தந்தையையும் அவரது இரண்டாவது மனைவியையும் கவனித்துக்கொள்வார்கள் என்று அதில் குறிப்பிடத்தப்பட்டிருந்தையும் சுட்டிக்காட்டியதுடன்,  பிளாட்டின் சொத்து மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட பின்னர், மகன் மற்றும் மருமகளின் நடவடிக்கை மாறி போனதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், மகனுக்கு எழுதிய சொத்து பத்திரத்தை ரத்து செய்தது சரிதான் என்று கூறினர்.

விசாரணையின்போது, மகனும்,  மருமகளும் தந்தையை கவனிக்கத் தயாராக இருந்தபோதிலும், அவர்கள் அவரது இரண்டாவது மனைவியை கவனித்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள்,    பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன்புரி சட்டம், 2007ன் படி, பாதிக்கப்படக்கூடிய பெற்றோர் மற்றும் வயதானவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு  அவர்கள் சம்பாதித்த சொத்துக்களை பரிசாக வழங்குகிறார்கள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியது மகனின் கடமை என்று கூறிய நீதிபதிகள், அதை மதிக்காததால், மகனுக்கு வழங்கப்பட்ட  இருந்து திரும்ப பெற உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.