புதுடெல்லி: நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரமிக்க மாநிலங்கள் வளர்ச்சி இந்தியா அறிக்கையில், தமிழ்நாடு குறித்த தவறான மதிப்பீடு தரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஆட்சேபக் கடிதம் எழுதியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.
சுகாதார வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை மதிப்பிடுவதில் தவறான வழிமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் பின்பற்றப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தமிழக அமைச்சர்.
சமீபத்தில் நிதி ஆயோக் அமைப்பால் வெளியிடப்பட்ட எஸ்டிஜி இந்தியா இன்டெக்ஸ் அறிக்கை 2018 ல், தமிழ்நாடு 77 குறியீட்டு மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடம் வகிக்கிறது. அதாவது, தேசிய சராசரியைவிட 25 புள்ளிகள் அதிகம்.
ஆனால், அதே நிதி ஆயோக் அமைப்பு ஜுன் 25ம் தேதி வெளியிட்ட சுகாதாரமிக்க மாநிலங்கள் வளர்ச்சி இந்தியா அறிக்கையில், தேசிய அளவில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இத்தகைய முரண்பாடுகளை சுட்டிக்காட்டியே, தவறான செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.