டில்லி

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி அனைவருக்கும் எளிதாக உள்ளதாக புகழாரம் சூட்டி உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி அமுலாக்கம் செய்யப்பட்டது.  அப்போது நிதி அமைச்சராக அருண் ஜெட்லி பதவி வகித்தார்.   தொடக்கத்தில் இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள் பல  பொருட்களுக்கு அதன் பிறகு குறைக்கப்பட்டன.   ஒரு சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி யில் இருந்து முழு விலக்கும் அளிக்கபட்டன.

அத்துடன் வரிக்கணக்கு செலுத்துவோருக்கு முதலில் இது குறித்து ஒன்றும் புரியாத நிலை இருந்தது.   இதில் இருந்த குழப்பங்கள் குறித்து பலரும் புகார் அளிக்கவே,  நடைமுறை சிறிது சிறிதாக மாற்றப்பட்டது.    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு பல மாறுதல்கள் செய்யப்படன.   ஆயினும் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் இதுவரை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படவில்லை.

முன்னாள் நிதி அமைச்சரான அருண் ஜெட்லி ஜிஎஸ்டி குறித்து, “இன்று ஜிஎஸ்டி அமுலுக்கு வந்து இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு துவங்குகிறது.   உலகெங்கும் பல நாடுகளில் மறைமுக வரியை ஒழிப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.    அதே நிலையை இந்தியாவும் சந்தித்தது.  இவை அனைத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட விவாதத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது.

தற்போது இரு ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி என்பது வாடிக்கையாளர்கள் மற்றும் வரிக்கணக்கு அளிப்போர் இருவருக்கும் எளிதானதாக  உள்ளது.   ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பல நாடுகளில் அந்த அரசு தேர்தலில் தோல்வி கண்டுள்ளது என எங்களுக்கு ஏராளமானோர் எச்சரிக்கை அளித்தனர்.  ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி ஜிஎஸ்டி வெற்றி பெற்றதுடன் அதை அறிமுகம் செய்த பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.