புதுடெல்லி: பல்வேறான முயற்சிகளுக்குப் பின்னரும், ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காத நிலையே உள்ளது.

சமீபத்தில், ராஜ்யசபா தெலுங்குதேச கட்சியை உடைத்து 4 உறுப்பினர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டது பாரதீய ஜனதா. பின்னர், இந்திய தேசிய லோக்தள் கட்சியின் 1 உறுப்பினரும் இணைந்தார். வரும் ஜுலை 5ம் தேதி மேலும் 4 உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் இந்த அணிக்கு கிடைக்கவுள்ளனர்.

ஆனால், எப்படிப் பார்த்தாலும் ஜுலை 5ம் தேதி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை 115 என்பதாக மட்டுமே இருக்கும். ராஜ்ய சபாவின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245. தற்போது சில இடங்கள் காலியாக உள்ளதால், தற்போதைய மொத்த எண்ணிக்கை 241 என்பதாக உள்ளது.

மொத்த எண்ணிக்கை 245 என்றாகும்போது, பெரும்பான்மைப் பெறுவதற்கு 123 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால்தான், நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் பல ஆபத்தான சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால், இந்தமுறை வெறும் 6 உறுப்பினர்கள் மட்டுமே குறைவதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதாதள் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி போன்ற கட்சிகளின் ஆதரவு எளிதாக கிடைக்கப்பெறும் என்றே தகவல்கள் கூறுகின்றன.