புதுடெல்லி:
ராஜினாமா முடிவை கைவிடுமாறு ராகுல் காந்தியை நேரில் சந்தித்து 4 காங்கிரஸ் முதல்வர்கள் வலியுறுத்தினர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பகெல் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புதுடெல்லியில் சந்தித்தனர்.
இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறும்போது, ராகுல் காந்தியை சந்தித்து 2 மணி நேரம் பேசினோம்.
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை கட்சி தொடர்களின் விருப்பத்துக்கேற்ப திரும்பப் பெறக் கோரினோம்.
எங்கள் கருத்துகளை ராகுல் காந்தி உன்னிப்பாக கேட்டார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகின்றோம்.
ராணுவத்தின் பின்னால் நின்று கொண்டு பிரதமர் மோடி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
மதத்தின் பெயரால் மக்களை தவறாக வழி நடத்துகிறார்.
வளர்ச்சி,பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிரதமர் மோடி பேச மாட்டார் என்றார்.
முன்னதாக, கெலாட் தொடர்ந்து வெளியிட்ட தமது ட்விட் பதிவில், தற்போதைய சூழலில் கட்சியை ராகுல் காந்தியால் மட்டுமே வழி நடத்த முடியும்.
சமரசம் செய்து கொள்ளாமல் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்ய ராகுல் காந்தியால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 முதல்வர் சந்தித்த பிறகு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த குலாம் அகமது, குலாம் நபி ஆசாத் மற்றும் அம்பிகா சோனி உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
அப்போது, ராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு ராகுல் காந்தியை வலியுறுத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ராகுல் காந்தியுடன் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.