சென்னை: அதிமுக சார்பில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா சீட் தரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்த கோபத்தில் முஸ்லீம்கள் இருப்பதால், அந்த சமூகத்தை சமாதானப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை அமையலாம் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியத்துவம் வாய்ந்த ராமநாதபுரம் தொகுதி, அதிமுக கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

அ‍திமுக சார்பாக 3 பேரை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம் என்ற நிலையில், ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் பாமகவுக்கு தரப்படலாம் என்றே கூறப்படுகிறது. எனவே, மீதமுள்ள 2 இடங்களில் ஒரு இடம் நிச்சயமாக முஸ்லீம் சமூகத்தவருக்கானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

அக்கட்சியின் ராமநாதபுரம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா, இதுதொடர்பாக தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, முஸ்லீம்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் பட்சத்தில், அது அன்வர் ராஜாவுக்கா அல்லது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கா? என்ற கேள்விதான் தற்போது தொக்கி நிற்கிறது.

அதேசமயம், அதிமுக கட்சிக்குள் ராஜ்யசபா சீட்டிற்காக பெரிய முட்டல் மோதலே நிகழ்ந்து வருகிறது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.