சென்னை:
போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் சம்பளம் கிடைக்கும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
இன்று 1ந்தேதி பிறந்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், போக்குரவரத்துக் கழக ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை திடீரென போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஸ் ஓடாததால், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் அதிகமான கட்டணம் வசூலித்து கொள்ளையடித்து வருகின்றனர். பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
போக்குவரத்து கழக ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தம் பொதுமக்களி டையே கடுமையான அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) இரவுக்குள் முழு ஊதியமும் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது. ஆனால், முறையான ஊதியம் வழங்கப்பட்டால் உடனடியாக பணிக்கு திரும்புவதாக மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தம் குறித்து கூறியுள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று வங்கி விடுமுறை என்பதால் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களின் முழு ஊதியமும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும், இன்று இரவுக்குள் அவர்களுக்கு ஊழியம் கிடைக்கும் என்று அறிவித்து உள்ளார்.
அரசின் உறுதியை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.