லக்னோ:
தன் குழந்தைக்கு நரேந்திர மோடி என்று பெயர் வைத்ததற்கு முஸ்லிம் தாய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர் மைனாஸ் பேகம். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பிறந்த ஆண் குழந்தைக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன் கணவரின் ஆலோசனைப்படி, நரேந்திர மோடி என்று பெயரிட்டார் என்ற செய்தி கடந்த மாதம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தன் குழந்தைக்கு மோடி பெயரை வைத்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றும் உறவினர் தன்னை தவறாக வழி நடத்தியதாகவும், அவர் சொல்லியே ம 12-ம் தேதி பிறந்த குழந்தையை,மே 23-ம் தேதி பிறந்ததாக பொய் சொல்ல சொன்னார் . இவ்வளவு பிரச்சினை ஆகும் என்று தெரியவில்லை என்றார்.
இதில் என்ன நடந்தது என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
25 வயதான பேகத்தின் உறவினர் முஸ்டாக் அகமது, இந்துஸ்தான் இந்தியா இந்தி நாளிதழில் பணியாற்றுகிறார்.
மே 23-ம் பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் வைத்தால், இந்த செய்தி உலகம் முழுவதும் பரவும் என்று தன்னை முஸ்டாக் அகமது சம்மதிக்க வைத்ததாக பேகம் தெரிவித்தார்.
இந்த செய்தியை தங்கள் பெயருடன் அகமதுவும் அவரது துறை தலைவர் காமர் அப்பாஸும் வெளியிட்டனர்.
எனினும், பேகத்தின் குற்றச்சாட்டை அகமதுவும் அப்பாஸும் மறுத்துள்ளனர். அகமது கூறும்போது, தன் குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் வைத்திருப்பதாக பேகம் கூறியதால்தான், அதனை செய்தியாக வெளியிட்டுள்ள சம்மதித்தேன்.
குழந்தையின் பிறந்த தேதியை பொய்யாக சொன்னது பற்றி எனக்கு தெரியவில்லை என்றார்.
இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு பேகத்தின் மாமனார் முகமது இத்ரீஸ் கடந்த மாதம் அளித்த பேட்டியில், நரேந்திர மோடி பெயரை வைத்ததை ஏன் எதிர்க்க வேண்டும்.
மோடி நம் நாட்டின் பிரதமர். இதில் நாம் பெருமைப் படத்தான் வேண்டும் அதோடு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது எங்கள் குடும்பம் எடுக்கும் முடிவு என்றார்.
இது குறித்து அப்போது பேகம் கூறும்போது, என் மகன் மே 23 ம் தேதி பிறந்தான். இதுகுறித்து துபாயில் இருக்கும் என் கணவரிடம் தெரிவித்தேன்.
அன்றைய தினம் நரேந்திர மோடி வெற்றி பெற்றிருந்ததால், அவர் பெயரையே வைக்குமாறு என் கணவர் கூறினார்.
நானும் மோடி பெயரை வைத்தேன். மோடியைப் போல வெற்றிகரமான மனிதராகவும், உழைப்பாளியாகவும் என் மகன் வரவேண்டுமென்று விரும்புகிறேன்.
மோடி பெயரை என் குழந்தைக்கு வைத்ததாக உங்கள் சமுதாயத்தாரால் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேகத்தின் குடும்பத்தார் நிர்பந்தத்தால் தன் குழந்தைக்கு வைத்த நரேந்திர மோடி என்ற பெயரை முஹம்மது அல்டாப் ஆலம் மோடி என்று பேகம் மாற்றியுள்ளதாகவும், மோடி என்ற பெயரை சேர்த்தே ஆக வேண்டும் என்பதில் அவர் கடைசிவரை பிடிவாதமாக இருந்ததாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கடந்த மாதம் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த சூழ்நிலையில், தன் ஆண் குழந்தைக்கு மோடி பெயரை வைத்ததற்காக வருந்துவதாக தற்போது பேகம் தெரிவித்துள்ளார்.