சென்னை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்கீழ் நந்தினியும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த வாரம் நந்தினிக்கு திருமணம் ஆக உள்ள நிலை யில், அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‘
சமூக போராளியும் சட்டக்கல்லூரி மாணவியுமான நந்தினி தமிழகத்தில் மது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், மதுவில்லா தமிழகம் வளர வேண்டும் என்றும் தனது தந்தையுடன் இணைந்து பல ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களை அமைதி வழியில் நடத்தி வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு திருப்பத்தூரில் மதுவுக்கு எதிராக பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம் நடத்தியதற்கு நந்தினி கைது செய்யப்பட்டு, பினனர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான நந்தினி, நேற்று மது, போதை பொருளா, மருந்து பொருளா? போதை பொருள் என்றால் சட்டப்படி விற்கக் கூடாது…. விற்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும், ஐபிசி 328ன் படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நந்தினி, நீதிபதியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வழக்குக்கு சம்பந்தமில்லாமல் நந்தினி கூச்சலிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, நந்தினி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப் பட்டு உடடினயாக கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வருகிற 5-ம் தேதி நந்தினி தனது பள்ளிகால நண்பர் குணா ஜோதிபாசுவை கரம் பிடிக்க உள்ளார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளது, குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.