டில்லி

பாஜகவை எதிர்க்க காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தது காங்கிரஸ் கட்சிக்கு ஆச்சரியம் அளித்துள்ளதாக கூறி உள்ளது.

மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி, “பாஜகவை எதிர்க்க நான் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன்.  இதற்கு அரசியல் ரீதியாக இணவோம் என பொருள் இல்லை.  ஒரு சில நேரங்களில் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமையுடன் செயல்படலாம்” என தெரிவித்தார்.

இதற்கு இரு கட்சிகளும் ஒப்புதல் அளிக்கவில்லை.   மம்தா பானர்ஜியின் தவறான கொள்கைகளால் மேற்கு வங்கத்தில் பாஜக வலுவடைந்துள்ளதால் இணைய இயலாது என காரணம் கூறி உள்ளனர்.   மேலும் மம்தாவின் அழைப்பு காங்கிரசுக்கு ஆச்சரியம் அளித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “மக்கள் முதலில் ஒன்று சொல்வதும் பிறகு மாறுவதும் நடைமுறையில் உள்ளது.  இந்த பழக்கம் மம்தா பானர்ஜிக்கு இயற்கையிலேயே உள்ளது.   அவருடைய அழைப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது.   பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ச்சி அடைந்ததற்கு மம்தாவின் தோல்வி அரசியலே காரணம்” என் தெரிவித்துள்ளார்.