புதுடெல்லி: தெலுங்குதேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவருமான லங்கா தினகர் அக்கட்சியிலிருந்து விலகி, பாரதீய ஜனதாவில் சேர்ந்திருப்பது, திரிபுரா பாணியை ஆந்திராவிலும் பாரதீய ஜனதா செயல்படுத்த நினைக்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஏற்கனவே, தெலுங்குதேசம் கட்சியின் 4 ராஜ்யசபா உறுப்பினர்கள், பாரதீய ஜனதாவில் இணைந்தனர். தற்போது, அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான லங்கா தினகரும் பாரதீய ஜனதாவில் இணைந்துவிட்டார்.
திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்கே வீழ்த்தப்படவே முடியாதவர்கள் என்று கருதப்பட்ட கம்யூனிஸ்டுகளை வீழத்தியது பாரதீய ஜனதா. எனவே, தற்போது தெலுங்குதேசப் பிரமுகர்களை ஒவ்வொருவராக காலிசெய்து, எதிர்க்கட்சியின் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறதா பாரதீய ஜனதா? என்றும் கேள்விகள் எழுகின்றன.
ஆனால், இது எந்தளவிற்கு சாத்தியம் என்பதும் விவாதிக்கப்படுகிறது. ஏனெனில், திரிபுராவில் நிகழ்த்த முடிந்தது ஆந்திரா போன்ற மாநிலங்களில் எப்படி சாத்தியமாகும்? அதுவும் சந்திரபாபு நாயுடு போன்ற அனுபவமும் ஆளுமையும் கொண்ட அரசியல்வாதியை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியுமா? என்றும் விவாதிக்கப்படுகிறது.