கொல்கத்தா

பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அதை மேம்படுத்த உத்திரப்பிரதேசத்தை மாதிரி மாநிலமாக கொண்டு செயல்பட வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.   மேலும் இந்த சட்ட ஒழுங்கு மேம்பாட்டுக்காக என்கவுண்டர்கள் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் மேற்கு வங்க அரசை வலியுறுத்தி வருகின்றனர்.  இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவையில் பதில் அளித்தார்.

மம்தா பானர்ஜி, “இந்தியா என்பது அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானது.   இந்நாட்டில் சிறுபான்மையினரை கும்பல் வன்முறையால் கொலை செய்வதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.    ஜார்க்கண்டில் இஸ்லாமிய இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என கூறாத்தால் தாக்கிக் கொல்லபட்டதை நான் கண்டிக்கிறேன்.

பாஜக தலைவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாததால் என்கவுண்டர் நடத்த வேண்டும் என சொல்லி வருகின்றனர்.    இவ்வாறு அத்து மீறி பேசும் பாஜகவினருக்கு எதிராக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை   இது போன்ற பேச்சுக்களை பேசும் பாஜக தலைவர்கள் மீது காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்கு பதிய வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை அனுப்பி இருக்கிறது.   எங்களிடம் சட்டம் ஒழுங்கு குறித்து பேசும் மத்திய அரசு ஏன் உத்திரப் பிரதேசம் மற்றும் அரியானாவில் பேசவில்லை என நான் கேட்கிறேன்.    அம்மாநிலங்களுக்கு இது போல் ஆலோசனைகள் அனுப்பி உள்ளார்களா?  மத்திய அரசு எங்களை அரசியல் ரீதியாக இழிவு படுத்த இவ்வாறு ஆலோசனை அனுப்புகிறது.

பாஜக அதிக வாக்குகள் பெற்றால் மாநிலத்தில் வன்முறை மட்டுமே நடக்கும்.  பாஜகவை எதிர்க்க எங்களுடன் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.   இந்த மூன்று கட்சிகளும் எப்போதும்  ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என நாக் கேட்கவில்லை.  ஒரு சில நேரங்களில் ஒரு சில விஷயங்களில் ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியமாகும்” என தெரிவித்துள்ளார்.