டில்லி

சென்னையில் தண்ணீர் பஞ்சம் மிகவும் கடுமையாக உள்ளதாக கம்யூனிஸ்ட்  மாநிலங்களவை உறுப்பினர் டி கே ரங்கராஜன் கவலை தெரிவித்துள்ளார்.

 

மாநிலங்களவையில் நேற்று நீர் பற்றாக்குறை குறித்து விவாதம் நடந்தது.  இதில்  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி கே ரங்கராஜன், டி ராஜா, சிவசேனா கட்சியின் அனில் தேசாய், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன் புனியா, உள்ளிட்ட பல்வேறு கட்சி  உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

இதில் டி கே ரங்கராஜன், “இந்தியாவில் முதல் முதலாக நீரற்று  போகும் நகரமாக சென்னை இருக்கும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.   சென்னை மக்களில் பலர் இப்போது தண்ணீர் லாரிகள், மாநகராட்சி மற்றும் தனியார் நீர் வழங்கல் ஆகியவற்றையே நம்பி உள்ளனர்.  ஒரு லாரி தண்ணீரின் விலை தற்போது ஒரு கிராம் தங்கத்தை விட விலை அதிகமாக உள்ளது.

அதாவது தண்ணீரை விட தங்கம் மலிவாக உள்ளது.  பல ஐடி நிறுவனங்களில் நீர்  பற்றாக்குறையால் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய உத்தரவிடப்பட்டுள்ளது.   பல உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன.    சென்னையை இந்த பற்றாக்குறையில் இருந்து காப்ப்பாற்றுவதில் அண்டை மாநிலங்களுக்கும் பொறுப்பு உள்ளது.” என தெரிவித்தார்.

டி ராஜா தனது உரையில், “தமிழ்நாடு சொல்ல முடியாத அளவு நீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.   இதனால் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து மாநிலத்தில் அமைதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேசிய அளவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இந்த பற்றாக்குறையை நீக்க முடியும்” என தெரிவித்தார்.

சிவசேனா கட்சியின் அனில் தேசாய், “தண்ணீர்  பிரச்சினை நாடெங்கும் அதிகரித்துள்ளது.    இது வர வர எல்லை மீறுகின்றது.   அடுத்து போர் உண்டானால் அது தண்ணீருக்காகவே இருக்கும்” என தெரிவித்தார்.  ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மனோஜ்குமார் ஜா, “தண்ணீரை வீணடிப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கூறினார்.

இது குறித்து மற்ற உறுப்பினர்கள் உரையாற்றுகையில் தண்ணீரை சேகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே வரும் சந்ததியினரை அழிவில் இருந்து காக்க முடியும் எனவும்  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதை தடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை எனவும் கூறினர்.