இந்தூர்
மத்திய பிரதேச மூத்த பாஜக தலைவர் மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆகாஷ் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டி உள்ளார்.
மத்திய பிரதேச மாநில பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா ஆவார். இவருடைய மகன் ஆகாஷ் விஜய்வர்கியா மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தூர் 3 தொகுதியின் உறுப்பினராவார். இவருடைய தொகுதியில் ஒரு ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்ததை ஒட்டி அங்கு உள்ளாட்சி அதிகாரிகள் விசாரணைக்கு வந்துள்ளனர்.
அங்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் அதிகாரிகள் பணியை தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார். அது மட்டுமின்றி அதிகாரிகளை அங்கிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் வெளியேறா வேண்டும் என ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் மேலும் அதிகரித்துள்ளது. ஆத்திரம் அடைந்த ஆகாஷ் அங்கிருந்த அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டி உள்ளார்.
அடி தாங்க முடியாமல் அரசு அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். செய்தியாளர்களிடம் ஆகாஷ், “நான் அங்கிருந்து அதிகாரிகளை வெளியேறுமாறு கூறினேன். என் எச்சரிக்கையை அவர்கள் கேட்கவில்லை. ஒரு மக்கள் பிரதிநிதியாக மக்களின் பிரச்னைகளை பேசி தீர்வு காண்பது எனது பணி ஆகும். நான் அதனால் பிரச்னையை சுமுகமாக முடிக்க நினைத்தேன்.
அதிகாரிகள் மக்களின் கருத்துக்களை கேளாமல் ஒரு தாதாவைப்போல் நடந்துக் கொண்டனர். இதனால் நான் கடும் கோபம் அடைந்தேன். கோபத்தில் நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. இனி நடப்பதில் கவனம் செலுத்துவோம்” என கூறி உள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=AxsdjSOb9PE?feature=youtu]
இந்த நிகழ்வு வீடியோ ஆக்கப்பட்டு ஊடகங்களில் உலவி வருகிறது. ஆகாஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்