சென்னை:
அரசு துறைகளை தனியார் மயமாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மோடி அரசு, பாரம்பரியம் மிக்க ரயில்வே துறையையும் சீரழிக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயிலில் வழங்கப்படும் உணவு போன்றவற்றை, ஐஆர்சிடிசியிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது.
அதன்படி சில வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களை இயக்க தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. இதற்கான டென்டர் விரைவில் வெளியிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, நெரிசல் குறைந்த பகுதிகளிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளி லும், தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுபோன்ற வழித் தடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தனியாருக்கு ரயில்களை குத்தகைக்கு விட்டு, அதன்மூலம் அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்றி இளைய தலைமுறையினர் திண்டாடி வரும் நிலையில், தற்போது பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் விபரீதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.