காசிப்பூர்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பல மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளன.
மத்திய பாஜக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவக் காப்பிட்டு திட்டத்டின் பெயர் ஆயுஷ்மான் பாரத் என்பதாகும். இந்த திட்டம் பல மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறுமையுற்றோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான செலவை அவர்களுக்கு பதிலாக அரசு செலுத்தி விடும். இவ்வாறு சுமார் 1300 நோய்களுக்கான சிகிச்சைகளை பயணாளிகள் பெற முடியும்.
உத்தர காண்ட் மாநிலத்தில் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. காசிப்பூர் பகுதியில் பல தனியார் மருத்துவ மனைகளில் ஏராளமான நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அப்படி நோயாளிகளே கிடையாது.
தனியார் மருத்துவமனைகள் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக தவறான தகவல் அளித்து பணத்தை பெற்றுள்ளனர். இந்த தொகையில் பரிந்துரை அளித்த அரசு மருத்துவர்களுக்கு பங்கு அளிக்கப்பட்டு வந்துள்ளது. காசிப்பூர் நகரில் இந்த மோசடியில் 11 மருத்துவமனைகள் ஈடுபட்டுளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபட்டதாக போலிக் கணக்கு அளிக்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு போலி நோயாளிகளை பரிந்துரை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த மருத்துவமனைகளுக்கு ரூ.97 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்பிட்டு திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அனைத்து தொகைகளையும் திரும்ப அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள்து.