ஹெல்சின்ஸ்கி

லகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் ஃபின்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் அணு மின் நிலையக்கழிவுகளை அப்புறப்படுத்தி அழிப்பது மிகவும் முக்கிய பணியாக உள்ளது.   அணு உலைக் கழிவுகள் என்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை நிலம், கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் போடுவதை சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் தடுத்து வருகின்றனர்.  அமெரிக்காவில் அணுக் கழிவுகளை நிலத்தில் புதைக்க முயன்ற போது அதை அங்குள்ள மக்கள் எதிர்த்துள்ளனர்.

இந்நிலையில் அணுக்கழிவு சேகரிப்பு மையம் ஒன்று ஃபின்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.   ஃபின்லாந்து நாட்டில் ஒலிகிலுவோட்டா தீவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.    இது ஹெலிசின்கி நகரில் இருந்து 230 கிமீ வடமேற்கில் அமைந்துள்ளது.  இந்த நிலையத்தில் நிலத்தடியில் அணுக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையம் பூமிக்கு கீழே சுமார் 400 மீட்டர் ஆழத்தில் அதாவது 1312 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   இதற்கான உரிமத்தை கடந்த வருடம் ஃபின்லாந்து அரசு அளித்துள்ளது.  விரைவில் இந்த நிலையத்தில் சேரும் அணுக்கழிவுகளை அழிக்கும் பணியும் தொடங்க உள்ளது.

இந்த நிலையத்தில் அணுக்கழிவுகள் செம்பு கண்டெயினர்களில் சீலிட்டு அடைக்கப்பட்டு சேகரிக்கப்பட உள்ளது.  இவை இந்த நிலையத்தில் உள்ள குழாய்கள் மற்றும் சுவற்று ஓட்டைகளில் வைக்கப்படும்.   இந்த கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு பிறகு ஒரேயடியாக நீக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

.