முஜாப்பர்நகர்:
சிபிஐ அதிகாரி போல் நடித்து, ரெய்டு நடத்த 2 போலீஸாரை அழைத்துச் சென்ற பலே கில்லாடியை போலீஸார் கைது செய்தனர்.
உத்திரப் பிரதேச மாநிலம் முஜாப்பர் நகரில் உள்ள ஆகாஷ் என்ற தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கூறி, கடந்த சனிக்கிழமை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிபிஐ அதிகாரி போல் ஒருவர் சென்றார்.
ரெய்டு நடத்த வாரண்டை காண்பித்து, 2 போலீஸாரை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் கேட்டார்.
அவரும், அந்த இருவருடன் 2 போலீஸ்காரர்களை அனுப்பி வைத்தார்.
இதில் ஒருவர் சர்தார்ஜி போல் வேடமிட்டு ஒட்டுத் தாடி வைத்திருந்தார். அந்த நபரை உன்னிப்பாக கவனித்த தொழிலதிபர் அதேஷ் கோயல், குரலை வைத்து அவர் ஏற்கெனவே தன்னிடம் வேலை பார்த்தவர் என்பதை கண்டுபிடித்தார்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு, போலி சிபிஐ அதிகாரிக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனையடுத்து. அந்த இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தபோது, தொழிதிபர் அதேஸ் கோயல் கூறியது உண்மை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், சிபிஐ அதிகாரி போல் வேடமிட்டு வந்த நபர் திரிவேந்தர் குமார் என்றும், இவர் சில காலம் அதேஸ் கோயலிடம் வேலை பார்த்ததும் தெரியவந்தது.
இது குறித்து டிஎஸ்பி யோகேந்திர சிங் கூறும்போது, தான் சிபிஐ அதிகாரி என்பதற்கான அடையாள அட்டையையும், ரெய்டு நடத்துவதற்கான வாரண்டையும் காண்பித்ததால், அதனை நம்பி 2 போலீஸ்காரர்களை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவருடன் அனுப்பியுள்ளனர்.
திரிவேந்தர் குமாரிடம் இருந்து ஆவணங்களை கைப்பற்றி, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தார்.