சென்னை:
திருச்சியில் நடைபெற்ற தமிழகஅரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியை எவ்வளவு காலம் தான் தூக்கி சுமக்க முடியும், இனிமேலும் காங்கிரஸை தூக்கி சுமக்க முடியாது என கடுமையாக பேசினார்.
நேருவின் பேச்சு திமுக, காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை உருவாக்கியுள்ள நிலையில், நேரு பேசுவதற்கு காரணம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்தான் என்பது தெரிய வந்துள்ளது.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமே மாபெரும் வெற்றியை பெற்றது.
திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் வெற்றி பெற்றார். ஆனால், அவர் வெற்றிபெற்ற பிறகு, அவரது வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகளை சந்தித்து நன்றிகூட தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை திமுகவின்ர் கவுரவக்குறைவாக கூறி வந்தனர்.
இதற்கிடையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருநாவுக்கரசர், தான் திருச்சி தொகுதியில் நாலறை லட்சம் ஓட்டுக்கள் வாங்கி ஜெயித்ததாகவும், இதில் சுமார் 2 லட்சம் ஓட்டுக்கள் தனக்காவே மட்டும் கிடைத்தது என்று கூறியிருந்தார்.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று கேன்.என்.நேரு வாயிலாக வெளிப்பட்டு உள்ளது.
இன்று தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி திருச்சியில் நடைபெற்ற அரசு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியை எவ்வளவு காலம் தான் தூக்கி சுமக்க முடியும், இனிமேலும் காங்கிரஸை தூக்கி சுமக்க முடியாது என கடுமையாக பேசினார்.
நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் எனவும் கூறியவர், திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்து போட்டியிட தாம் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கே.என்.நேருவின் பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியலில் இன்றைய தண்ணீர் பிரச்சினையை விட திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்தே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில், கே.என்.நேரு அவராகத்தான் பேசினாரா அல்லது தேர்தல் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட எண்ணி திமுக தலைமையின் ஆலோசனையின் பேரில் பேசினாரா என்றும் கேள்வி எழுப்பபட்டு வருகிறது.
ஏற்கனவே திருநாவுக்கரசர் 2 லட்சம் ஓட்டு தனக்காவே மட்டும் கிடைத்தது என்று கூறியதை, திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக சாடியிருந்தது குறிட்பபிடத்தக்கது.