சென்னை:
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் தற்போது நிலவும் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். தண்ணீரைத் தேடியும், லாரிகளை எதிர்நோக்கியும் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக குற்றம் சாட்டி வருகிறது. தமிழக அரசை கண்டித்து இன்றுமுதல் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னைவில்லிவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், சேகர்பாபு எம்எல்ஏ உட்பட ஏராளமானோர் பங்கேற்று காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை வைத்து திமுக அரசியல் செய்யவில்லை அதிமுக அரசு குடிமராமத்து பணிகளை செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் ஆர்ப்பாட்டத்தின்போத குற்றம் சாட்டினார்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் (மே) மாவட்ட நகர ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நத்தம் பேரூராட்சி அலுவலகம் அருகில், நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ம. ஆண்டி அம்பலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது. உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் சார்பில் குடிநீர் பிரச்சனையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் வேலு தலைமையில் நடைபெற்றது.
இதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னை தீர வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என அதிமுக சார்பில் தமிழகம் இன்று கோயில்களில் யாக பூஜை நடத்தினர். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.