சென்னை:

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்ய தடை செய்யக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன்-1, சீசன்-2 வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பிக்பாஸ் சீசன்-3 வெளியாக இருப்பதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன்  என்பவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3க்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  கவர்ச்சிகரமான ஆடைகள், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள், சண்டை, சச்சரவு என இளைஞர்கள், பார்வையாளர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரை யும் மனரீதியாக பாதிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட் இருப்பதாகவும், எனவே இந்திய பிராட்காஸ்ட் பவுண்டேசன் எனப்படும் ஐபிஎஃப் தணிக்கை சான்று பெறாமல் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் பிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், இதுகுறித்து  தமிழ்நாடு அரசு, டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தொலைகாட்சி நிறுவனமானஎண்டோமால் நிறுவனம், நடிகர் கமல்ஹாசன்  ஆகியோரை  ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டார்.