கொல்கத்தா
வேலை நிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கின்றனர்.
கொல்கத்தா என் ஆர் எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு முதியவருக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர் மரணம் அடைந்தார். அதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் அந்த மருத்துவமனை மருத்துவர்களை குண்டர்களைக் கொண்டு தாக்கி உள்ளனர். இதில் மூன்று பயிற்சி மருத்துவர் படுகாயம் அடைந்தனர். அதை ஒட்டி அந்த மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அந்த செய்தி பரவவே மாநிலம் எங்கும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்களும் ஆதரவு குரல் கொடுத்தனர். இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒன்றும் கருத்து தெரிவிக்காததால் எதிர்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தா தலைமை செயலகத்தில் மருத்துவர்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக செய்தி வந்தது. இன்று மாலை மூன்று மணிக்கு மேல் நடைபெற உள்ள இந்த சந்திப்பில் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் செய்தியாளர்கள் உள்ளிட்டோர் சந்திப்பின் போது அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் பிரதிநிதிகள் தங்கள் சொந்த காமிரா மூலம் சந்திப்பு நிகழ்வுகளை படம் பிடிக்க அனுமதி கோரி உள்ளனர். இதற்கு அரசு இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை.