புதுடெல்லி: சமூகவலைதளவாசிகளின் அரசியல் ஒருதலை சார்பு குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், நான்கில் மூன்று பங்கு மக்கள், இந்தியா அனைத்து மதத்தினருக்குமான நாடு என்ற கருத்தைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதேசமயம், அவர்களில் ஐந்தில் ஒருவர் வேறு மாதிரி கருத்தையும் கொண்டுள்ளனர். சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம் என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. அதாவது, இன்றைய அரசியல் சூழலில், சமூக வலைதளங்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு, வாக்காளர்களிடம் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிவதற்காக நடத்தப்பட்டதே இந்த ஆய்வு.
சமூகவலைதளங்களைப் பயன்படுத்தாத இந்துக்களிடம் ஒப்பிடுகையில், சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் இந்துக்களில், இரண்டுவிதமான எண்ணங்கள் கொண்டவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
சமூகவலைதளம் பயன்படுத்தாத இந்துக்களில் 17% பேர் இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டுமானதே! என்ற எண்ணம் கொண்டிருக்கையில், அவற்றைப் பயன்படுத்துவோரில் 19% பேர் அந்த மனப்பாங்கை கொண்டுள்ளார்கள்.
அதேசமயம், இந்தியா என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான நாடு என்ற கருத்தை, சமூகவலைதளம் பயன்படுத்தாதோர் 73% பேர் கொண்டிருக்க, பயன்படுத்துவோரில் 75% பேர் அதேவிதமான கருத்தை பிரதிபலிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.