டில்லி
மேற்கு ரெயில்வே ரெயிலுக்குள் மசாஜ் சேவை நடத்த உள்ளதை இந்தூர் மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் சங்கர் லால்வானி கடுமையாக எதிர்த்துள்ளார்.
மேற்கு ரெயில்வே பிரிவின் ரத்லாம் உள்பிரிவில் இந்திய ரெயில்வேக்கு வருமானம் ஈட்டுவதற்காக ஒரு புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் ரெயிலில் மசாஜ் செய்யும் பணியாட்களை அமர்த்துவது அந்த திட்டமாகும். இதன் மூலம் ரெயில்வேக்கு வருடத்துக்கு ரூ.90 லட்சம் உபரி வருமானம் கிடைக்கும் என கூறப்பட்டது.
இந்த மசாஜ் சேவை மூன்று விதமாக பிரிக்கப்பட உள்ளது. அவை தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் ஆகும். இந்தூரில் இருந்து கிளம்பும் 39 ரெயில்களில் இந்த மூன்று சேவைகளும் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் பிரிவில் ஆலிவ் ஆயில் போன்ற மலிவான எண்ணெய் கொண்டு ரூ. 100 கட்டணத்துக்கு மசாஜ் செய்விக்கப்படும்.
வைரம் பிரிவில் விலை உயர்ந்த எண்ணெய் கொண்டு ரூ.200 கட்டணத்தில் மசாஜ் செய்யப்படும்.
பிளாட்டினம் சேவை என்பது கிரீம் கொண்டு ரூ 300க்கு மசாஜ் செய்வதாகும்.
இந்த சேவைகள் அனைத்தும் 15 முதல் 20 நிமிடம் வரை செய்யப்படும்
இந்த மசாஜ் திட்டத்துக்கு இந்தூர் மக்களவை தொகுதி உறுப்பினர் சங்கர் லால்வாணி கடும் எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது கடிதத்தில், “ரெயில்வே பெட்டிகளில் பயணம் செய்யும் போது மசாஜ் சேவை அளிப்பது மிகவும் தவறானதாகும்.
பெண்களும் பயணம் செய்யும் ரெயிலில் அவர்கள் முன்பு மசாஜ் செய்வது என்பது நமது இந்திய பண்பாட்டுக்கு எதிரானதாகும். ஷதாப்தி, ராஜதானி போன்ற ரெயில் களில் இத்தகைய மசாஜ் சேவை நடத்தினால் கூட பரவாயில்லை என கூறலாம். ஆனால் ஏழை மக்கள் பயணிக்கும் ரெயிலில் இந்த சேவை அவசியமற்றதாகும்.
இந்த ரெயில்களில் சுமார் 3 அல்லது நான்கு மணி நேரப் பயணத்தில் எத்தனை பேர் மசாஜ் செய்துக் கொள்வார்கள் என்பது ஐயமாகும். இந்த தேவையற்ற திட்டத்துக்கு பல மகளிர் அமைப்புக்கள் என்னிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ரெயில்வே அமைச்சகம் இந்த மசாஜ் திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என சங்கர் லால்வாணி தெரிவித்துள்ளார்.