சென்னை: தமிழகத்தில் ரயில்வே அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ் போன்ற பிராந்திய மொழிகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டுமெனவும், தெற்கு ரயில்வேயில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்று அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள், நிலைய அதிகாரிகளின் மொழிப் பிரச்சினையால் ஒரே பாதையில் வந்தன. இதனால், ஏற்படவிருந்த பெரிய விபத்து எப்படியோ தவிர்க்கப்பட்டது. இந்த விஷயம் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில், ரயில்வே பணிகளில் பெருமளவில் வடநாட்டவர்கள் திட்டமிட்டு பணியமர்த்தப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமீப காலங்களாக தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால், பல சமயங்களில் மொழிப் பிரச்சினையும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே, ரயில்வே அலுவல் மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தெற்கு ரயில்வே சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் ஒரு அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இத்தகைய உத்தரவும் ஒரு மறைமுக இந்தி திணிப்புதான் என்று பல நிலைகளிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.