வேலூர்:
ஏடிஎம் நம்பர் கேட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டது குறித்து, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருப்பு மேடு பகுதியை சேர்ந்த செந்தில்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், நான் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன்.
கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து காட்பாடியில் உள்ள எனது வங்கி கணக்கிற்கு ரூ. 50ஆயிரம் பணத்தை அனுப்பினேன்.
பணம் அனுப்பிய சில மணி நேரத்தில் வங்கி கணக்குக்கு கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை காட்பாடியில் உள்ள எனது மகன் எடுத்து பேசியுள்ளார்.
போனில் பேசியவர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறி, ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. உங்களது ஏடிஎம் ரகசிய எண் கூறினால் தான் லாக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
எனது மகனும் அவர் வங்கி மேலாளர் என்று நம்பி, ஏடிஎம் ரகசிய எண்ணை கூறியுள்ளான். அடுத்த நிமிடத்திலேயே வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நான், வெளிநாட்டில் இருந்து வந்தேன். பின்னர் வங்கிக்கு சென்று கேட்டால், வங்கியில் இருந்து யாரும் ஏடிஎம் ரகசிய எண் கேட்டு அழைக்கவில்லை என்றனர்.
அப்போது தான் மர்ம ஆசாமிகள் மூலம் ரூ.50ஆயிரம் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.