பெங்களூரு:
சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை 15ம் தேதி விண்ணில் பாயும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்து உள்ளார்.
2022ம் ஆண்டில் விண்வெளிக்கான இந்தியர்களின் பயணம் தொடங்கும் என ஏற்கனவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்த நிலையில், 2019ம் ஆண்டு ஜனவரியில், சந்திரனுக்கு, சந்திராயன் – 2 ஏவப்படும் என தெரிவித்தது. ஆனால், இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களால் சந்திராயன்2 விண்ணில் ஏவப்படுவது தாமதமானது.
இதையடுத்து, ஜூலை மாதம் சந்திராயன் – 2 விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க்3 எம்1 மூலம் விண்ணில் ஏவப்படும் என கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.
சந்திராயன்-2 விண்கலமானது செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றவர், இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு சென்று சந்திராயன்-2 தரையிறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தும் என்றும் ஏற்கனவே சந்திராயன்-1 நிலவில் நீர் உள்ளதாக கூறியது. அது போல சந்திராயன் 2 பல புதிய தகவல்களை நமக்கு தரும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். அதற்கான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.
இந்ம நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் , சந்திராயன் 2 விண்கலம், ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்றும், இதற்காக ரூ.603 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுமார் 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்றவர், இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
சந்திராயன்2 விண்கலமான திட்டமிட்டபடி, . செப்., 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.