மும்பை

காராஷ்டிர மாநில முதல்வர் பதவியை சிவசேனாவுடன் பங்கிட்டுக்கொள்ள பாஜக ஒப்புக் கொண்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

சென்ற மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றின் போது பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்தன. அதன் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலால் சிவசேனா கட்சி பாஜக அரசை கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து தற்போதைய மக்களவை தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் நாடெங்கும் பாஜக கூட்டணிக்கு 352 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி வர உள்ள மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தொடர உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக அமைச்சரான சுதிர் முங்கண்டிவார், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி தொடரும். இந்த கூட்டணி வெற்றி பெற்று அடுத்த முதல்வராக பாஜகவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என தெரிவித்திருந்தார். இது சிவசேனா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் ஒருவர், “கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைத்த போது இரு கட்சிகளும் முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடங்களாக பங்கிடுவதாக தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாறுதல் ஏதும் இல்லாததால் அடுத்து பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் ஆக மாட்டார்” என தெரிவித்துள்ளார்.