டில்லி
இந்திய விமானப்படை விண்வெளியில் பறக்க திறமையுள்ள 10 விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. வரும் 2021 ஆம் வருட தொடக்கத்தில் நடைபெற உள்ள இந்த விண்வெளிப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த விண்வெளி வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ நிலையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், “வரும் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணில் பறக்க உள்ளனர். இவர்களை ஏற்றிச் செல்லும் விண்களத்தை ஏந்திச் செல்லும் ஜி எஸ் எல் வி எம்கே 3 ராக்கெட்டுகள் கடந்த சனிக்கிழமை அன்று சோதனை செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளது. அத்துடன் இதற்கான சீஈ 20 எஞ்சினும் சோதிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்துக்காக இந்திய விமானப்படை 10 திறமையுள்ள விண்வெளி வீரர்களை இன்னும் இரு மாதங்களில் தேர்வு செய்ய உள்ளது. அவர்கள் பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபடுத்தப் படுவார்கள். பயிற்சி முடிவுக்கு பின் அவர்களில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பபட உள்ளனர்.
இதற்கான பயிற்சி முறைகள் ஏற்கனவே தயார் நிலையிலுளன. இந்த விண்வெளி வீரர் குழுவுக்கான உயிர்காக்கும் உபகரணங்களை ராணுவ கொள்முதல் ஆணையம் உருவாக்கி உள்ளது. விண்வெளி வீரர்கள் செல்லும் விண்கலம் மீண்டும் வான்வெளியில் நுழந்து கடலில் வந்து சேரும். அதற்கான பணிகளை இந்திய கடற்படை செய்து வருகிறது.
தேசிய விண்வெளிக்குழு இந்த விண்வெளிப்பயண ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு அறுமாதமும் பரிசீலனை கூட்டங்கள் நடத்துவதை கட்டாயமாக்கி உள்ளது. அது மட்டுமின்றி நாங்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பயிற்சிகள் குறித்து பரிசீலனை கூட்டங்கள் நடத்த உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.