ஈரோடு:
உச்சநீதி மன்ற உத்தரவுபடியே தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
நேற்று ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாசூர்-சோழசி ராமணி மின்சார கதவணை பாலத்தின் சீரமைப்பு பணிகளை மின்சார துறை அமைச்சர் தங்கமணி நேற்று பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,.
தமிழக மின்வாரியத்தல் காலியாக இருந்த 375 பொறியாளர்கள் பணியிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டது. இதில் 36 பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அவர்கள் பணியில் சேர்ந்துள்ளதால் இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட முடியாது என்று தெரிவித்தவர, தமிழகத்தில் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரம் கடைகள் திறப்பதால் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்.
இவ்வாறு தங்கமணி கூறினார்.