டேராடூன்

ரே சாயலில் உள்ள இரட்டை சகோதரர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக சேர்ந்துள்ளனர்.

அபினவ் பதக் மற்றும் பரினவ் பதக் ஆகிய இருவரும் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் ஆவார்கள். இருவரும் ஒரே சாயலில் வித்தியாசமின்றி காணப்படுவார்கள். தற்போது 22 வயதாகும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் ஒன்றாகவே இருந்து வந்தனர். இடையில் ஒருவர் லூதியானாவிலும் மற்றவர் ஜலந்தரிலும் பொறியியல் படிப்பு படித்த போது பிரிந்து இருந்தனர்.

இருவருக்கும் இந்திய ராணுவத்தில் இணைந்து பணி ஆற்ற ஆர்வம் இருந்தது. அதை ஒட்டி டேராடூனில் உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். அப்போதும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இருவரும் இரு வேறு பிரிவுகளில் சேர்ந்ததால் சீருடை மூலம் மட்டுமே அனைவராலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் சீருடை அணியாத சமயத்தில் பல குழப்பங்கள் நேர்ந்துள்ளன.

அபினவ்க்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்த விவரங்களை பயிற்சியாளர் பரினவுக்கு சொல்வதும் பரினவுக்கு சொல்ல வேண்டியதை அபினவுக்கு சொல்வதும் பலமுறை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக கல்லூரி உணவு விடுதியில் பல முறை ஒருவர் உணவு உண்டதால் மற்றவருக்கு உணவு மறுக்கப்பட்டதும், உணவருந்தியவருக்கு மீண்டும் உணவு அளித்ததும் நிகழ்ந்துள்ளன. இதில் பரிணவ் இருந்த பிரிவின் உணவு விடுதியில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர் அபினவ் உணவு விடுதியில் வந்து உணவு அருந்துவார்.

பயிற்சிக்கு பிறகு அபினவ் தாம் விரும்பிய ராணுவ வான்வழி பாதுகாப்பு பிரிவில் சேர்ந்துள்ளார். பிரணவ் ராணுவ விமான போக்குவரத்து பிரிவில் சேர்ந்துள்ளார். இருவரும் இனி ஒன்றாக பணி புரிய முடியாது என்பதை இரட்டையர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இதன் மூலம் இருவர் குறித்த குழப்பங்கள் மற்றவர்களுக்கு தீர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.