சென்னை

திமுக வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மதுரை வடக்கு அதிமுக தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களிடம் அதிமுக வுக்கு ஒற்றை தலைமை தேவை என தெரிவித்தார். அது மட்டுமின்றி ஒற்றை தலைமை இல்லாததால் சரியான முடிவுகள் எடுக்க முடியவில்லை எனவும் சுயநலமற்ற ஒருவர் தலைமை பதவிக்கு தேர்ந்து எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதே கருத்தை இன்று குன்னம் அதிமும சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் தெர்வித்தார். இதனால் அதிமுகவில் சர்ச்சை உண்டானது. சென்னையில் வரு ஜுன் 12 ஆம் தேதி அன்று  மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் கூட்டபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “தேர்தல் முடிவுகள், கட்சியின் முடிவுகள் குறித்து கட்சியின் நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது. கட்சியின் செயல்பாடு குறித்து கட்சியினர் சிலர் கூறிவரும் கருத்துகள் வரவேற்கத் தக்கவையாக இல்லை. கட்சியில் கருத்துகளை கூற செயற்குழு, பொதுக்குழு என்று பல வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏற்கனவே ஊர் இரண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

நமது அதிமுகவை பார்த்து எதிரிகளும் கூட நம்மைப்போல் இருக்க ஆசைப்பட்டார்கள். தொண்டர்களுக்கு அதிமுக மீதான அன்பு, பற்று அடிப்படையில் இத்தகைய கருத்துகளை கூறிவருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தேர்தல் முடிவுகள் பற்றியோ, கட்சி நிர்வாக முடிவுகள் குறித்த தங்கள் பார்வைகள் பற்றியோ எல்லா இடங்களிலும் கருத்துக் கூறக்கூடாது. இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

மொத்தத்தில் நமது அதிமுக தொண்டர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுங்கும் தற்போது கட்டாயத் தேவை ஆகும். இனி யாரும் ஊடகங்கள் வாயிலாக, கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.