சென்னை:
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வை இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.
தமிழக அரசு இந்த ஆண்டுக்கான டெட் தேர்வுங்ககு சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்ப தாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து ஜூன் 8, 9ந்தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெட் தேர்வு தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடை நிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாளை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர்.
இரண்டாம் தாள் எழுத 4லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இரு தேர்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடையும். தேர்வின் மொத்த மதிப்பெண் 150 என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.