ஐதராபாத்:

உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தோனி முக்கிய பங்கு வகிப்பார் என ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவாய்ஸி தெரிவித்துள்ளார்.


அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவாய்ஸி கல்லூரி நாட்களில் கிரிக்கெட்டில் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்.

அப்போது அவர் சிறந்த பவுலராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் இடையேயான விதிமுறைகள் பற்றி எங்களுக்கு உண்மையிலேயே தெரியாது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. தோனி இல்லாமல் இந்தியாவால் வெல்ல முடியாது என்பதையும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
பேட்டிங், விக்கெட் கீப்பிங் ஆகியவற்றில் தோனி சிறந்து விளங்குகிறார்.

கல்லூரி நாட்களில் நான் சிறந்த ஓப்பனிங் பவுலராக இருந்திருக்கிறேன். பெங்களூர் பல்கலைக் கழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்களை வீழ்த்தினேன்.

இதனால் மண்டல சாம்பியன்ஷிப் வென்றோம். இதனையடுத்து தெற்கு மண்டல பல்கலைக்கழக டீமுக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

அரசியலுக்கு வராவிட்டால் கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேனா என்று சொல்ல முடியவில்லை. நம் வாழ்க்கை பயணம் எங்கு அழைத்துச் செல்லும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.

இந்த நிலைக்கு நான் வருவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. அரசியலுக்கு வந்தாலும் கிரிக்கெட்டை நான் நேசிக்கிறேன். நாம் ஏதாவது திட்டமிட்டால், கடவுள் மனதில் ஏதாவது இருக்கிறது என்றார்.