கேப்டவுன்

முதல் முறையாக தென் ஆப்ரிக்கா அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவில் பொதுத்தேர்தல் நடந்தது.   இதில் அமெரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின்  சிரில் ராமபோசா இரண்டாம் முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    அவர் கட்சி பெரும்பானமை இடங்களை கைப்பற்றியதை அடுத்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.   இம்முறை 28 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய 30 பேர் கொண்ட அமைச்சரவை தற்போது 28 ஆக குறைக்கப்பட்டுள்ளது.   இந்த அமைச்சர்களில் பாதிப் பேர் பெண்கள் ஆகும்.  இது குறித்து ராமபோசா, “முந்தைய அரசில் இருந்த 30 அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைக்கப்பட்டுள்ளது.   அமைச்சர்களில் பாதி பேர் பெண்கள் ஆவார்கள்.  இதன் மூலம் தென் ஆப்ரிக்காவில் பாலியல் பாகுபாடு நீக்கபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசியல் ஆர்வலரான ஜோலினி டூபே, “இந்த அமைச்சரவையில் பாதி பேர் பெண்களாக இருப்பது நாட்டில் பாலின பாகுபாடு இல்லை என்பதை தெரிவிக்கிறது.   ஆனால் இந்த பெண்கள் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மூத்த அரசியல் வாதிகள் ஆவார்கள்.  தற்போதுள்ள நிலையின்படி அமைச்சர்களாக இளம்பெண்களை நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் எதிர்க்கட்சி தலைவர் மிமுசி மைமேன், “ராம்போசாவின் அரசியல் காரணமாக இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.   தென் ஆப்ரிக்காவில் தற்போது திறமை உள்ள அமைச்சர்களின் தேவை உள்ளது.  ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தனது அரசியல் நன்மைக்காக இவர்களுக்கு அமைச்சர் பதவிகளை அதிபர் அளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.