லண்டன்: இந்த உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா – மேற்கிந்திய அணிகள் முதன்முறையாக ஜுன் 6ம் தேதியான இன்று மோதவுள்ளன. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரு அணிகளுமே தங்களுடைய முதல் போட்டியில், எதிரணியினரை பெரியளவில் மிரட்டிய அணிகளாக உள்ளன. ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் பந்துவீசிய ஆஸ்திரேலியா, ஆஃப்கன் அணியை 207 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் போன்றோர் அரைசதம் அடித்தனர்.
தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய மேற்கிந்திய அணி, ஷாட் பிட்ச் பந்துகளாக வீசி, வெறும் 105 ரன்களுக்கு பாகிஸ்தானை காலி செய்தது. பின்னர், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. கிறிஸ் கெயிலின் ஃபார்ம் எதிரணியினரை அச்சுறுத்துவதாக உள்ளது.
எனவே, மொத்தத்தில், இன்றையய ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கருத்து.