2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, ‘தளபதி’ தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய் ரத்னா, பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, ‘பருத்தி வீரன்’ சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.