திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குரைத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிக்கன் பக்கோடாவில் விஷம் கலந்து வைத்ததில் நாய் மற்றும் 8 பூனைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதி முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி. இவர் தெருக்களில் செல்லும் போது அப்பகுதியில் சுற்றி வரும் நாய்கள் அடிக்கடி குரைத்து வந்தன. இதனால் கோபம் அடைந்த அவர் நாய்களை வி‌ஷம் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு சிக்கன் பக்கோடாவில் வி‌ஷத்தை கலந்து தெருவில் வைத்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த நாய் ஒன்று வி‌ஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை தின்றது. இதில் அந்த நாய் இறந்து போனது.

இதற்கிடையே அதே பகுதியில் சுற்றித் திரிந்த 8 வளர்ப்பு பூனைகளும் வி‌ஷம் கலந்த சிக்கன் பக்கோடாவை தின்றன. இதில் 8 பூனைகளும் ஆங்காங்கே இறந்துகிடந்தன. இன்று காலை நாய்- பூனைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதனை வளர்த்து வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது நாய், பூனைகள் வி‌ஷம் வைத்துக் கொள்ளப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால் சோகம் அடைந்த அப்பகுதி மக்கள் இறந்து போன நாய்- 8 பூனைகளையும் சாலை ஓரத்தில் ஒன்றாக வைத்தனர்.

பின்னர் அதற்கு மாலைகள் அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். நாய்,  பூனைகள் கொல்லப்பட்டது தொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விஜயகுமார் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.