டில்லி

க்களவை சபாநாயகர் பதவிக்கு மேனகா காந்தி, ராதா மோகன் சிங் மற்றும் வீரேந்திர குமார் உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவுகிறது.

மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக மீண்டும் அமைச்சரவை அமைத்துள்ளது. இதில் முந்தைய அமைச்சர்களில் சிலர் இடம் பெறவில்லை. தற்போது மக்களவை சபாநாயகர் பதவிக்கு உறுப்பினரை கட்சி தலைமை தேர்வு செய்ய உள்ளது. இந்த சபாநாயகர் பதவியை அடைய பாஜகவின் மூத்த தலைவர்களான மேனகா காந்தி, ராதா மோகன் சிங் மற்றும் வீரேந்திரகுமார் ஆகிய மூவரும் விரும்புகின்றனர்.

தற்போதுள்ள நிலையில் மேனகா காந்தி எட்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார், எனவே இவருக்கு மக்களவை குறித்த விவரங்கள் மற்றும் அனுபவம் அதிகம் என்பதால் இவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது.

ராதா மோகன் சிங் ஆறு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து படிபடியாக முன்னேறியவர். அத்துடன் இவரது அமைதியான மற்றும் அனுசரித்துப் போகும் குணம் சபாநாயகர் பதவிக்கு இவரை பொருத்தமானவராக ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

வீரேந்திர குமார் மக்களவை உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சபாநாயகராக மிகவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது

ஆனால் இவர்கள் யாரையும் தேர்வு செய்யாமல் தென் இந்தியாவில் இருந்து யாரையாவது மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு சில பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை மக்களவை துணை சபாநாயகராக பிஜு ஜனதா தளம் கட்சியின் பர்த்ருஹரி மேதாப் தேர்ந்தெடுக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக மேதாப் கடந்த 2017ல் விருது பெற்றுள்ளார்.