டில்லி:
இஸ்லாமியர்களின் முத்தலாக் விவாகரத்து முறைக்கு தடை செய்யும் வகையில், முத்தலாக் மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
கடந்த ஆட்சியின்போது, முஸ்லிம்களின் விவாகரத்தான முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தற்போது 17வது மக்களவையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. இதன் காரணமாக 16வது மக்களவையின்போது தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவும் காலாவதி ஆனது.
இந்த நிலையில், முத்தலாக் நடைமுறையை தடை செய்ய, நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்,’’ என்று மத்திய சட்ட அமைச்சர் மற்றும், , தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
மேலும், ‘‘நடப்பு நிதியாண்டில், 5ஜி அலைக்கற்றை, வானொலி அலைவரிசை ஆகியவற்றிற்கு பெரும் ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நலிவடைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை சீரமைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்,’’ என்றார்.
நீதிபதிகள் நியமனம் பற்றி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘நீதித்துறை நியமனங்களில் நானோ, எனது அமைச்சகமோ அஞ்சல் அலுவலகம் போல் இருக்க முடியாது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்துடன் ஆலோசனை நடத்தும் முக்கிய பொறுப்பும் உள்ளது. நீதிபதிகள் நியமனம் செய்யும் முறையில் கொலிஜியம் முறைக்கு சட்ட அமைச்சர், சட்ட அமைச்சகம் ஆகியவை உரிய முக்கியத்துவம் அளிக்கும்,’’
இவ்வாறு அவர் கூறினார்.