குவஹாத்தி: வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்தான் கார்கில் போரில் தீரத்துடன் போரிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சனாவுல்லா என்று குற்றம் சாட்டிய காவல் அதிகாரியின் ஆவணம் மோசடியானது என்ற விபரம் வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த காவல் அதிகாரியான உதவி ஆய்வாளர் சந்திரமால் தாஸ் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர் சம்பந்தப்பட்ட 3 சாட்சிகளும். கொலைகாஷ் கிராமத்தைச் சேர்ந்த முகமது குரான் அலி, முகமது சுவஹான் அலி மற்றும் அஜ்மல் அலி ஆகிய அந்த 3 சாட்சிகளும், தங்களின் வாக்குமூலம் மற்றும் கையெழுத்தை மோசடி செய்து, சனாவுல்லாவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் அந்த காவல் உதவி ஆய்வாளர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கார்கில் போரில் தீரத்துடன் செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் விருது வாங்கியவர் சனாவுல்லா. அவர் இந்திய ராணுவத்தில் கவுரவ கேப்டன் பதவியில் இருந்தவர்.
ஆவணங்களின் அடிப்படையில் அவர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர் என்று தீர்ப்பாயம் அறிவித்தவுடன், அவர் தடுப்புக் காவல் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய ராணுவம் அவருக்கு சட்டரீதியாக கட்டாயம் உதவ வேண்டுமென முன்னாள் ராணுவ அதிகாரிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.