சென்னை:

மிழகத்தில்  சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு கலைக்கப்படு வதாக சென்னை உயர்நீதி மன்றம் பதிவாளர் திடீர் உத்தரவிட்டு உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கோவில்களில் உள்ள ஏராளமான  சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பல சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏராளமான  புகார்கள் குவிந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிலை கடத்தல் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார்.

அதன்பிறகு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்  நியமிக்கப்பட்டு திருடப்பட்ட பல சிலைகள் மீட்கப்பட்டன. மேலும்,  தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் பாதுகாப்பு குறித்தும் அதன் சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

ஆனால், தமிழகஅரசு ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு கொண்ட சிறப்பு அமர்வை அமைத்து கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 20ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை மகாதேவன், ஆதிகேசவலு தலைமையிலான  சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், சிறப்பு அமர்வை கலைக்கப்பட்டு உள்ளதாகவும்,  இனி சிலை கடத்தல் வழக்குகளை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் ஜோதிராமன்  அறிவித்து உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் அமர்வு கலைக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.