சென்னை:

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருடன் இருப்பதாக  சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ள னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்த முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் தீவிரமாக  பங்கெடுத்து வந்தார். அங்கு ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  13 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பான காவல்துறையினர் மீது குற்றம் சாட்டி முக்கிய ஆவனங்கள் மற்றும், ஆவணப்படத்தை வெளியிட்ட முகிலன் அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குக் கிளம்பிய நிலையில்  திடீரென காணாமல் போனார்.

இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு, முகிலனை  கண்டுபிடித்து தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக காவல்துறை அவரை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டாமல் இருந்து வருகிறது. முகிலன் காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  முகிலன் காணாமல் போய் கிட்டதட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அவரை என்ன ஆனால் என்ற கேள்வி மேலோங்கி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முகிலன் வட இந்தியாவில் உயிரோடு தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிபிசிஐடி போலிஸின் அறிக்கையில் ‘முகிலன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. விரைவில் அவரைக் கண்டுபிடிப்போம்’ எனத் தெரிவித்துள்ளனர்.