டில்லி:
சென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, மத்தியஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டதோடு, இது சம்பந்தமாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் வனத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேலம் 8வழிச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இதற்கு அந்த பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பல வழக்குகள் செங்னனை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை, மற்றும் தமிழகஅரசு பதில் அளிக்க கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தொடர்ந்து வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்