குவஹாத்தி: வெளிநாட்டவர்களுக்கான தடுப்புக் காவல் முகாமிற்கு அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற ஜுனியர் கமிஷன்டு அதிகாரியான முகமது சனாவுல்லா விஷயத்தில், தங்களுக்கு அவர் மீது அன்பிருந்தாலும், இந்த விஷயத்தில் செய்யக்கூடியது எதுவுமில்லை எனக் கூறியுள்ளது இந்திய ராணுவம்.

இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்த சனாவுல்லா, கார்கில் போரில் பங்கேற்றவர். இவர் கடந்த 2017ம் ஆண்டு கெளரவ கேப்டன் நிலையில் ஓய்வுபெற்றவர்.

அவர் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மனைவி சமீனா பேகத்திற்கு அனைத்துவித உதவிகளும் வழங்கப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அவரின் மனைவியிடம் இதுதொடர்பாக ஆழ்ந்த கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரி சனாவுல்லாவின் பிரச்சினை என்பது சட்டம் தொடர்பானது என்றும், அந்த விஷயத்தில் ராணுவம் தரப்பில் எதுவும் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உதவிகள் தேவைப்பட்டால் ராணுவம் தரப்பில் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சனாவுல்லாவின் அடையாளமும், குடிமகன்களுக்கான தேசிய பதிவில் உள்ள விபரங்களும் மாறுபடும் விஷயத்தில், குவஹாத்தி உயர்நீதிமன்றத்தை அணுகும்படி சனாவுல்லாவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த முன்னாள் ராணுவ அதிகாரியை காப்பாற்ற, ராணுவம் கட்டாயம் முன்வர வேண்டுமென, முன்னாள் ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.