புதுடெல்லி: நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 57 பேரில், 22 பேரின் மீது, அதாவது 39% அமைச்சர்களின் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவற்றில், 16 பேர்களின் மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. அதாவது, தீவிரவாதம், சதியாலோசனை, கலவரம் செய்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கெடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதாப் சந்திர சாரங்கி, பாபுல் சுப்ரியோ, கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், அமித்ஷா மற்றும் பிரல்ஹாத் ஜோஷி ஆகிய 6 அமைச்சர்களின் மீது மட்டும், மதம், இனம், பிறப்பிடம் மற்றும் மொழி ஆகியவற்றின் பேரால் பிரிவினையை உண்டாக்குதல் மற்றும் அவற்றின் அடிப்படையில் செயல்படுதல் என்பதாக வழக்குகள் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த அமைச்சர் முரளிதரன் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும், மோடியின் 57 அமைச்சர்களின் 51 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களில், ஹர்சிம்ரத் கவுர் பாதல் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு ரூ.217 கோடி சொத்து இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பியூஷ் கோயல் அமைச்சரவையின் இரண்டாம் பணக்காரர். ராவ் இந்தர்ஜித் சிங் மூன்றாமிடத்தில் வருகிறார். அதேசமயம், 5 அமைச்சர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கும் கீழாகும் என்பது குறிப்பிடத்தக்கது.